search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுமித்ரா மகாஜன் அஞ்சலி"

    மறைந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் உடலுக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். #SomnathChatterjee #SumitraMahajan
    கொல்கத்தா:

    பாராளுமன்ற உறுப்பினராக 10 முறை பதவி வகித்தவர் சோம்நாத் சாட்டர்ஜி(89). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக  பதவி வகித்தார்.

    மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கடந்த 2008-ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலக்கி கொண்ட வேளையில் மக்களவை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டார்.

    இதையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி கொல்கத்தாவில் வசித்து வந்தார். கடந்த இருமாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், நேற்று காலை சோம்நாத் சாட்டர்ஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்தனர். அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் இன்று காலை 8.15 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை முன்னாள் - இந்நாள் சபாநாயகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும், பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சோம்நாத் சாட்டர்ஜி வாழ்ந்த காலத்தில் தனது உடலை கொல்கத்தா அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக அளிப்பதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

    இந்நிலையில், சோம்நாத் சாட்டர்ஜியின் உடல் முழு அரசு மரியாதைக்கு பின் மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும் என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    அவரது உயிர் பிரிந்த மருத்துவமனையில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சோம்நாத் சாட்டர்ஜியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, அவர் முன்னர் வக்கீலாக பணியாற்றிய கொல்கத்தா உயர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அங்கிருந்து மேற்கு வங்காளம் மாநில சட்டசபைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு துப்பாக்கி தோட்டாக்கள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர், தெற்கு கொல்கத்தாவில் உள்ள ராஜா பசந்தா ராய் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சோம்நாத் சாட்டர்ஜியின் உடலுக்கு ஏராளமான தலைவர்களும், மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவரது மறைவு செய்தியை அறிந்ததும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் கொல்கத்தா வந்தடைந்தார். சோம்நாத் சாட்டர்ஜியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய சுமித்ரா மகாஜன் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

    இன்னும் சில நிமிடங்களில் இங்கிருந்து  இறுதி ஊர்வலம்  புறப்படும். கொல்கத்தா அரசு தலைமை மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களின் ஆய்வுக்காக தன்னை தானமாக அளித்த  சோம்நாத் சாட்டர்ஜியின் உடல் அங்கு ஒப்படைக்கப்படும். #SomnathChatterjee #SumitraMahajan
    ×